பெங்களூரு : கர்நாடக மாநில போலீஸ் துறை சார்பில், பெங்களூரு கோரமங்களாவில் நேற்று 12வது அகில இந்திய போலீஸ் வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது. இப்போட்டி பிப்., 4ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில், கர்நாடகா, தமிழகம் உட்பட 24 மாநிலங்களை சேர்ந்த போலீஸ் அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியை துவக்கி வைத்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது:
கர்நாடகாவில் தேசிய போலீஸ் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடத்துவது இதுவே முதன் முறை. கர்நாடகா போலீசில் வில்வித்தை அணியே இல்லை.
ஆனால், மாநில டி.ஜி.பி., அலோக் மோகன், இப்போட்டி நடத்துவதில் ஆர்வம் காட்டினார். இத்துடன் இப்போட்டியில் பங்கேற்கும் வகையில் வில்வித்தை குழுவையும் உருவாக்கி உள்ளார். அவர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிகளை ஏற்பாடு செய்து, என்னையும் பங்கேற்க செய்துள்ளது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
மாண்டியா சம்பவத்தின் பின்னணியில் அரசியல் துாண்டுதலை தவிர, வேறு எதுவும் இல்லை. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், இதெல்லாம் நடக்கிறது. ஆனால் மாநில அரசு இதை பொறுத்துக் கொள்ளாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement