டெஹ்ரான் : இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து, நாசவேலையில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு ஈரானில் நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. உளவு பார்ப்பதாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடனான போரிலும், இஸ்ரேலுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் தன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரானை கருதுகிறது.
அந்நாட்டு மீது அணு ஆயுத பயன்பாடு குறித்த குற்றச்சாட்டையும் இஸ்ரேல் வைத்துள்ளது. ஆனால், இதை மறுத்துள்ள ஈரான், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுப்போம் என கூறி வருகிறது. அதேநேரத்தில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு மற்றும் பிற மேற்கத்திய உளவுத் துறை அமைப்புகளுக்கு உளவு பார்ப்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் மரண தண்டனை போன்றவற்றை ஈரான் அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2022ல் ஈரானின் ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான ஒரு தொழிற்சாலையை தாக்க திட்டமிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரானில் பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்து, பயங்கரவாத செயலை நிறைவேற்ற அவர்கள் முயன்றதாகவும் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அந்நாட்டு கீழ் நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இதை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, நால்வரும் நேற்று துாக்கிலிடப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement