பட்டரஹள்ளி : ஜி.எஸ்.டி., ஆய்வு அதிகாரிகள் போன்று நடித்து, நகைக்கடையில் நுழைந்து, பணியாட்களை மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்த நால்வர் கைது செய்யப்பட்டனர். 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு, பட்டரஹள்ளியில், ஆர்.எம்.எஸ்., காலனியில், ஒரு நகைக்கடை உள்ளது. ஜனவரி 27ம் தேதி நான்கு பேர் கடைக்கு வந்தனர். தங்களை தங்க நகைகளின் ஹால்மார்க் மற்றும் ஜி.எஸ்.டி., ஆய்வு அதிகாரிகள் என, அறிமுகம் செய்து கொண்டனர்.
‘நாங்கள் நகைக்கடைகளில் சோதனை நடத்துகிறோம். உங்களின் கடையும் ஒன்று.
நீங்கள் ஹால்மார்க் இல்லாமல், சட்டவிரோதமாக நகைகளை விற்பனை செய்கிறீர்கள். எனவே நாங்கள் சோதனை நடத்த வந்துள்ளோம்’ என கடை ஊழியர்களிடம் கூறி, 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றனர்.
தங்களை அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதால், நகைக்கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின், டி.வி.ஆர்., சிஸ்டத்தை எடுத்துக்கொண்டு, இன்னோவா காரில் தப்பியோடினர். இவர்களை பிடிக்கும் நோக்கில் நகைக்கடை ஊழியர் ஹேமராஜ் உட்பட, சிலர் இரண்டு பைக்குகளில் பின் தொடர்ந்தனர்.
டி.சி.பாளையா அருகில் சென்றபோது, தங்களை கடை ஊழியர்கள் பின் தொடர்வதை போலி அதிகாரிகள் கவனித்தனர். உடனடியாக ஹேமராஜ் பைக்கை இடித்துத் தள்ளி, அவரை கொல்ல முயற்சித்தனர். அப்போது மற்றொரு வாகனத்தின் மீது மோதி, விபத்து நடந்தது.
விபத்து குறித்து தகவலறிந்து, கே.ஆர்.புரம் போலீசார் அங்கு சென்றனர். இவர்களை கண்டதும் போலி அதிகாரிகள் தப்பியோட துவங்கினர். இவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்தபோது, சோதனை பெயரில் கொள்ளையடித்தது தெரிந்தது.
விசாரணையில் கேரளாவின் சம்பத்குமார், 55, ஜோஷி, 54, உத்தரபிரதேசத்தின் சந்தீப் சர்மா, 48, அவினாஷ்குமார், 27, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற, 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டனர். கொள்ளையர்களுடன் தொடர்புள்ள ரவி தப்பிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்