எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை: அப்பாவு

திருநெல்வேலி: “தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை” என்று சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியிலுள்ள பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதையே தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதுமையின் காரணமாக வீல் சேரில் அமருவது தொடர்பாக முன்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்ய கேட்டபோது, அப்போதைய சட்டப் பேரவை தலைவர் தனபால், இப்போது உள்ள இடமே அவர்களுக்கு போதுமானது என்று கூறினார். கருணாநிதிக்கு 2-ம் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டது. முதல் வரிசையில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுக்கு இந்த இருக்கைகள் வேண்டும் என்று எழுதி கையொப்பம் இட்டு கேட்டதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டது. இப்போது அவர்களுக்குள் பிரச்சினை. அவர்கள் பிரிவார்கள், பின்னால் சேர்வார்கள். அதில் சட்டப் பேரவை தலையிடாது. நான் விதிப்படி, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளேன்.

ஓ.பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக தனபால் என்னிடம் கேட்டபோது, நான் அவரிடம், பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை அரசியலமைப்பு சட்டப்படி நீங்கள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை நீங்கள் செய்தீர்களா என்று கேட்டேன். அவர்கள் எதிர்கட்சி துணை தலைவராக உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

அதன்படி அவரைத்தான் எதிர்கட்சி துணைத் தலைவராக அறிவித்துள்ளோம். சட்டப் பேரவை உறுப்பினர்கள் எந்த சின்னத்தில் வெற்றி பெற்றார்களோ, அந்த சின்னத்தின் அடிப்படையில்தான் சட்டப் பேரவையில் கருதப்படுவார்கள். அதே சின்னம் தான் கணக்கீடு செய்யப்படும். எனவே நான், பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு சட்டப் பேரவையையோ, சட்டப் பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.