சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 30.12.2023-ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மிதந்து வந்தது. சடலத்தில் வெட்டு காயங்கள் இருந்ததால் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தார். தலை, கைகள், கால்கள் இல்லாததால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது. இந்தநிலையில் சடலத்தில் சந்தன நிற டி சர்ட் மட்டும் இருந்தது. அதை வைத்து போலீஸார் வழக்கை விசாரிக்கத் தொடங்ங்கினர். அதே நேரத்தில் தமிழகத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து குன்றத்தூர் போலீஸார் விசாரித்தனர். ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் குன்றத்தூர் போலீஸார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வந்தார். இந்த வழக்கு குன்றத்தூர் போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பவன்குமார் ஆலோசனையில் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

டி-சர்ட் மூலம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், ராமாவரத்தைச் சேர்ந்த பூமிநாதன் (32) எனத் தெரியவந்தது. இதையடுத்து பூமிநாதனைக் கொலை செய்த குற்றத்துக்காக குன்றத்தூர் சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (34), ராமாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பூமிநாதன், சென்னையில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வந்திருக்கிறார். அப்போது அவருக்கு அங்கு செக்யூரிட்டியாக வேலைப்பார்த்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே செக்யூரிட்டி திலீப்குமாருடன் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. பூமிநாதனுடன் பழகிய பிறகு திலீப்குமாருடன் பேசுதை தவிர்த்து வந்திருக்கிறார். அதனால் பூமிநாதனுக்கும் திலீப்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முன்விரோதமாக மாறியிருக்கிறது. அதனால் பூமிநாதனைக் கொலை செய்ய திலீப்குமார் முடிவு செய்திருக்கிறார்.
இதையடுத்து திலீப்குமார், தனக்குத் தெரிந்த டிரைவர் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கடந்த டிசம்பர் 27-ம் தேதி பூமிநாதனை பைக்கில் அழைத்துச் சென்று பின்னந்தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கிறார் திலீப்குமார். இதையடுத்து பூமிநாதனின் தலை, கைகள், கால்களை துண்டு துண்டாக வெட்டிய திலீப்குமாரும் விக்னேசும் அதில் முண்டத்தை மட்டும் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியிருக்கிறார். தலை, கைகளை மட்டும் முடிச்சூர் ஏரியில் வீசியுள்ளனர். அதன்பிறகு திலீப்குமார் தலைமறைவாகி விட்டார். பூமிநாதனைக் காணவில்ல என்று அவரின் பெற்றோர், ஜனவரி மாதத்தில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், பூமிநாதன் அணிந்திருந்த சந்தன கலர் டி சர்ட் மூலம் அடையாளம் கண்டு கொலையாளிகளைக் கைது செய்து விட்டோம்” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பூமிநாதனுக்கு திருமணமாகிய நிலையில் சென்னையில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அதனால்தான் அவரை குடும்பத்தினர் யாரும் தேடவில்லை. நீண்ட நாள்களாக பூமிநாதன் போனில் பேசாததால் அவரின் குடும்பத்தினர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தக் கொலை வழக்கில் கள்ளத் துப்பாக்கியை திலீப்குமாரிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த துப்பாக்கியை அவர் வடமாநிலத்திலிருந்து வாங்கி வந்திருக்கிறார். அது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான டீம் சிறப்பாக புலனாய்வு செய்து விசாரித்ததால் துப்பு துலங்க முடிந்தது. மேலும் தலை, கைகள் இல்லாமல் ஒரு சடலத்தை வைத்து விசாரித்து இறந்தவரை அடையாளம் கண்டதோடு கொலையாளிகளையும் பிடித்திருக்கிறோம். இதைப் பார்க்கும்போது ஸ்காட்லாந்து போலீஸூக்கு நிகரானவர்கள் சென்னை போலீஸ் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY