சாம்பல்பூர்(ஒடிசா): ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் வாக்குறுதிகளே பட்ஜெட் அறிவிப்புகளாக வெளி வந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் சாம்பல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் ஏழ்மையைப் போக்கிய மத்திய அரசின் கொள்கைகளை இந்த பட்ஜெட் மேலும் வலுப்படுத்தும். ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் வாக்குறுதிகளே பட்ஜெட் அறிவிப்புகளாக வெளி வந்துள்ளன. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என ஒவ்வொருவரின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதி என்றால் அதற்கு மோடியின் வாக்குறுதி என பெயர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்இடி பல்புகள் பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இதன்மூலம் மின் கட்டணம் வெகுவாக குறைந்தது. நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில் மின்சாரம் சென்று சேராத கிராமங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மின்சார வசதியை பெற்றுள்ளன. தற்போது ஏழைகளின் மின்கட்டணத்தை பூஜ்ஜியமாக மாற்ற முயன்று வருகிறோம். அதற்காகேவே, ஒரு கோடி குடும்பங்களுக்கு சூரிய மின்தகடு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, சாம்பல்பூர் ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கான நிரந்தர கட்டிட வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி, சாலைவசதி, ரயில்வே, உயர் கல்வி ஆகிய துறைகளில் ரூ. 68 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்த திட்டங்கள் மூலம் ஏழைகள், தொழிலாளர்கள், பணியாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். அதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்க உள்ளது. ஒடிசாவை கல்வி மையமாகவும், திறன் மேம்பாட்டுக்கான மையமாகவும் உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.