தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் `சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கக்கேட்டு அரசிடம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. அதேசமயம் இந்த சான்றிதழ் தொடர்பான சர்ச்சைகளும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா என்பவர் 9 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு, இந்தியாவிலேயே முதல்முறையாக `சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றார். அவரைப் போல, சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் – ஷர்மிளா தம்பதியினர், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகவும் `சாதி மதம் அற்றவர்’ எனச் சான்றிதழை வாங்கியிருக்கின்றனர். மேலும், அதில் பல சிக்கல்களையும் சந்தித்திருக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு கூட திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் `சாதி மதமற்றவர்’ சான்றிதழ் குறித்து பேசியதுகூட விவாதமானது. அதாவது, ஒரு பள்ளி நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “என் பிள்ளைகளுக்கு ‘No caste’ சான்றிதழ் வாங்க முயற்சித்தேன். ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது எனக்கூறி தர மறுத்துவிட்டார்கள். நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். அங்கேயும்கூட, ‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். இந்து என இருக்கிறதே எதாவது ஒரு சாதியை போடுங்கள்’ என்று கூறிவிட்டார்கள். எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறினேன் அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதேசமயம், எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றை தூக்கி எறிந்துவிட முடியாது. உரிமையை வாங்க வேண்டிய இடத்தில் ஒருவர் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். `எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், என்னை என்போக்கில் விட்டுவிடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். எனவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது!” எனத் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், `சாதி மதம் அற்றவர்’ சான்றிதழ் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தீர்ப்பும் கவனம் ஈர்த்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அந்த விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், தனக்கு `சாதி மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “அரசு தரப்பில் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது. அதேவேளையில் இதுபோல் வழங்கினால் சில பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “அரசு உத்தரவுப்படி கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது!” என்று மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
`சாதி மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வாங்க நினைப்பது நல்ல எண்ணம் என்றாலும், அதனால் தனிப்பட்ட உரிமைகள், அரசின் இட ஒதுக்கீடுகள் பெறுவதில் சிக்கல்கள் எழும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY