அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க பா.ஜ.க முயல்வதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் மேற்கொள்வதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்த அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்…
அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிந்ததிலிருந்தே த.மா.கா எந்த பக்கம் என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் ஜி.கே வாசன். எடப்பாடிக்கும் மோடிக்கு நடுநிலையான இடத்தில் இருக்கிறோம் என்பதே த.மா.கா-வின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்கிவருவதால் எந்த கூட்டணி என்பதை இறுதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. த.மா.க நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க அணியில் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதேசமயம் பா.ஜ.க-வுடனான நட்பை முறித்துக் கொள்ளவும் வாசன் விரும்பவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி த.மா.கா யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை அறிவிக்கவிருக்கிறார் ஜி.கே வாசன்.
இதற்கிடையில் அவர் எடப்பாடியையும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவையும் சந்தித்தது அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னையில் எடப்பாடியை சந்தித்தார் ஜி.கே வாசன். அதற்கு முன்தினம் டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்திருக்கிறார்.
இந்நிலையில் இரு கட்சிகளையும் மீண்டும் கூட்டணியில் கொண்டு வரும் வேலையை வாசன் மேற்கொள்கிறார் என அரசியல் வட்டாரங்களில் செய்திகள் தீயாய் பரவின.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசனிடமே பேசினோம், “பிப்ரவரி 2-ம் தேதி எடப்பாடியை சந்தித்தேன், பிப்ரவரி 1-ம் தேதி ஜே.பி நட்டாவை நாடாளுமன்றத்தில் பார்த்து பேசினேன். இதற்கிடையில் அண்ணாமலையோடும் தொலைபேசியில் பேசினேன். இவர்களுடன் அரசியல்தான் பேசினேன். ஆனால் இந்த சந்திப்புகளில் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி இணைப்பு போன்ற எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க-வும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வும் கூட்டணி பேசுகிறார்கள் என்றால் அதற்கிடையில் நான் எல்லாம் ஒன்றுமேயில்லை. நான் என் கட்சி தொடர்பாகத் தான் பேச முடியும், முடிவெடுக்க முடியும். பிறகு கூட்டணி இணைப்புக்கான வேலையை நான் எப்படி மேற்கொள்ள முடியும். மற்ற கட்சி கூட்டணி விவகாரங்களில் நான் எப்படி தலையிட முடியும். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணைந்து செயல்படுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என பரவி வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY