மதுரை: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், “தம்பி விஜய் ஒரு இளைஞர், தமிழர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் கட்சி குறித்து எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “கமல்ஹாசன் மதுரையில்தான் கட்சி தொடங்கினார். கமல்ஹாசன் உலக நாயகன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு தொகுதிக்கு தன்னுடைய வாயை வாடகைக்கு விட்டுவிட்டார். அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது. விக்ரம் படத்திலிருந்து கமலுக்கும் திமுகவுக்கும் போடாத ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.
விஜய் இப்போதுதான் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய கொள்கை என்ன என்பது குறித்து இப்போதுதான் சிலவற்றை கோடிட்டு காட்டியிருக்கிறார். தம்பி விஜய் ஓர் இளைஞர், தமிழர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் கட்சி குறித்து எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எங்களுடையதில் எம்ஜிஆர் மன்றம்தான் அடிப்படை. ஆனால் எம்ஜிஆர் மன்றம் மட்டும் காரணம் கிடையாது. மக்கள் அனைவரும் புரட்சித் தலைவரை விரும்பினார்கள். அவர் வருகையை ஒட்டி, மக்கள் 12 மணி நேரம் காத்து கிடந்தனர். அப்படிப்பட்ட வரலாற்றை நாம் இனிமேல் காண முடியாது. அதிமுக என்பது வேறு, மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பது வேறு” என்றார்.