தமிழக அரசியலின் புதிய என்ட்ரி நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து பரபரவென வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
விஜய்யை சுற்றி அரசியல் சர்ச்சைகளும் விவாதங்களும் பல ஆண்டுகளாகவே நீடித்துக் கொண்டிருந்தது. காரணம், அவரின் படங்களும் படங்கள் சார்ந்த நிகழ்வுகளில் அவர் பேசிய பேச்சுகளுமே.

அரசியலுக்காக சினிமாவிலிருந்து விலகுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அவருக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொடுத்ததே அவரின் சினிமாக்கள்தான். தன்னுடைய படங்கள் வழியேதான் விஜய் தனது அரசியல் இமேஜை கட்டமைத்துக் கொண்டார்.
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘நான் செத்து பிழைச்சவண்டா’ போல எம்.ஜி.ஆர் பல பாடல்களில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார். பல பாடல்களில் அண்ணாவின் புகழைப் பாடியிருப்பார். சூரியன் உதயமாகிற ஒரு காட்சி பெரும்பாலான படங்களில் இடம்பெற்றிருக்கும். கலைஞரும் தன் கொள்கைகளை, வசனங்களாகவும், கதைகளாகவும் திரையின் வழியே நிகழ்த்தி திமுகவுக்கு வலுசேர்த்திருக்கிறார். ரஜினிகாந்தின் படங்களை பற்றி சொல்லவே வேண்டாம். ‘நா எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது’ தொடங்கி ஒவ்வொரு படத்திலும் எதோ ஒரு அரசியல் டச் கட்டாயமாக இருக்கும்.

விஜய்யும் அப்படித்தான். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய படங்களில் ஒரு அரசியல் டச் இருப்பதையும் படம் வெளியான பிறகு அதுசார்ந்த சிக்கல்களில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகவே வைத்திருந்தார்.
`நாளைய தீர்ப்பு’ விஜய்யின் முதல் படம். அவரின் தந்தை எஸ்.ஏ.சி தான் டைரக்டர். ‘காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எந்தக் கட்சியையும் பகைக்காமல் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு ஊர் எங்கும் பேர் வாங்க அவர்கள் போல நாமும் உழைக்க வேண்டும் என பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். அதேமாதிரி, படத்தில் விஜய்யின் வீட்டின் சுவற்றில் ஒரு புறம் இரட்டை இலையும் இன்னொரு புறம் உதயசூரியனும் ஓவியமாக வரையப்பட்டிருக்கும். இப்படி ஒரு அரசியலை எங்கேயுமே பார்க்க முடியாது.

கலைஞரின் அனுதாபியான எஸ்.ஏ.சி தன் மகனின் வளர்ச்சிக்காக தன்னை பொதுவானவராக காட்டிக்கொள்ள இப்படி செய்திருப்பார்.
2002, காவிரி பிரச்சனை பற்றியெரிந்து கொண்டிருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில் வெளியான யூத் படத்தில் காவிரி பிரச்சனை பற்றி இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசியிருப்பார். ‘இப்டி டீக்கடையில உட்காந்து வெட்டியா ஊர் நியாயம் பேசிக்கிட்டு இருக்றதுனாலதான் குடிக்க தண்ணீ கூட கிடைக்காம இருக்கோம்’ என ஒரு காட்சியிலும்

‘இந்த உலகத்துல காத்து, தண்ணீ, வானமெல்லாம் எல்லாருக்கும் பொது. அதை உனக்கு தரமாட்டேன்..விடமாட்டேன்னு பக்கத்து ஸ்டேட்காரன் மாதிரி பேசாதீங்கய்யா’ என விமர்சித்திருப்பார்.
இதே காலக்கட்டத்தில் மஜித் இயக்கத்தில் வெளியான ‘தமிழன்’ படத்திலும் சில முக்கியமான விஷயங்களை தொட்டி சென்றிருப்பார்கள். மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தைக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், படத்தில் மாஞ்சோலை என்பது ‘பூஞ்சோலை’ என மாற்றப்பட்டிருக்கும். இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியவர் எஸ்.ஏ.சி என்பது குறிப்பிடத்தக்கது.
காதலை மையமாகக் கொண்ட படங்களை தாண்டி ஒரு மாஸ் ஹீரோவாக விஜய் தன்னை தகவமைத்துக் கொண்ட காலத்தில்தான் விஜய்யின் ஓப்பனிங் பாடல்கள் கருத்து பேச ஆரம்பித்தன. அதற்கு முக்கிய காரணம் பாடலாசிரியர் கபிலன். விஜய்க்கு கபிலன் எழுதிய ஓப்பனிங் பாடல்கள் சமூகப்பிரச்சனைகளையும் அரசியலையும் பிரதானமாக பேசியது.

‘தொடக்கத்தில் சில படங்களில் பெண்களை மையமாகக் கொண்டு ஒரு கொண்டாட்ட தொனியில்தான் விஜய்க்கு பாடல்களை எழுதிக்கொண்டிருந்தேன். விஜய் மாஸ் ஹீரோவாக ஆன பிறகு அவரின் தாக்கமும் வீச்சும் பெரிதாக இருந்தது. அதன்பிறகுதான் அவரின் படங்களுக்கு சமூகப்பிரச்சனைகள் சார்ந்த வரிகளை எழுத ஆரம்பித்தேன்.’ என கபிலனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார்.
‘சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள….தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து’ என விஜய்யே பேசுவது போல் போக்கிரி பொங்கல் பாடலில் வரிகளை எழுதியிருப்பார் கபிலன். விஜய், பிரபுதேவா, கபிலன் இதே கூட்டணி மீண்டும் இணைந்த வில்லு படத்தின் ஓப்பனிங் பாடலும் முழுக்க முழுக்க சமூகப்பிரச்சனைகளையும் அரசியலையும் மட்டுமே பேசியிருக்கும்.

இலங்கையில் இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது வில்லு படத்தில் ‘ஆண்டவந்தான் என்ன பார்த்து என்ன வேணும் என்று கேட்டா ‘அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்’ என ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விஜய்யை பாட வைத்திருப்பார்.

அந்த சமயத்தில் விஜய்யும் ஈழத்தமிழர்கள் பிரச்னையில் கொஞ்சம் தீவிரமாகவே கவனம் செலுத்தியிருந்தார். தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் கூட்டி உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்தார். இதே பாடலில் ‘பாரதிய படிச்சுப்புட்டா பெண்களுக்கு வீரம் வரும். கார்ல்மாக்ஸ நினைச்சுப்புட்டா கண்களுக்குள் நெருப்பு வரும். பெரியார மதிச்சுப்புட்டா பகுத்தறிவு தானா வரும்.’ போன்ற வரிகளும் இடம்பெற்றிருக்கும்.
‘ஆலமரம் பள்ளிக்கூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாறனும். நீ தாய்மொழியில் கல்விக்கற்று தமிழ்நாட்ட வளர்க்கணும்.
உணவு, உடை, இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கனும் அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்’ என வேட்டைக்காரனின் நா அடிச்சா தாங்கமாட்ட பாடலும் முழுவதும் சமூகக்கருத்துக்களையே பேசியிருக்கும். இதே பாடலில், ‘வரட்டி தட்டும் சுவற்றுல வேட்பாளர் முகமடா… காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா’ என பொதுவாக எல்லா அரசியல்வாதிகளின் தலையிலும் ஒரு கூட்டு வைத்திருப்பார்.
சுறா விஜய்யின் 50 வது படம். அதில் மீனவராக நடித்திருப்பார். ‘வெற்றிக்கொடி ஏத்து வீசும் நம்ம காத்து வருங்காலம் நம்ம கையில்தாண்டா…’ என்கிற பாடலுடன்தான் விஜய் எண்ட்ரியே கொடுத்திருப்பார். ‘சேரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும். சாதிக்கும் கைகள் சேர்ந்தால்…’ ‘ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு..’ என வாலி தன் பங்குக்கு விஜய்க்காக அரசியல் நெருப்பை பற்ற வைத்திருப்பார்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியும் பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு பிறகு வெளியான விஜய்யின் ‘வேலாயுதம்’ படத்தில் அரசியல் நெடி பயங்கரமாக வீசியிருக்கும். வழக்கம்போல ஓப்பனிங் பாடலில் ‘வரப்ப மிதிச்சு ராப்பகலா உழைச்சு வாழுற ஜனங்க நம்ம கட்சி’ என ஏழைப்பங்காளனாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார் விஜய்.

‘நல்ல வேள நா ஆளுங்கட்சி’ என்பது போல வசனம் பேசி பல இடங்களில் அப்போதிருந்த ஆட்சிக்கு ஆதரவாளன் என்பதை காண்பித்திருப்பார்.
அதேபடத்தில் ஊரே சேர்ந்து விஜய்யை சென்னைக்கு ட்ரெயின் ஏற்றிவிடுவது போன்ற இன்னொரு காட்சியில் தனி ரூட் பிடித்திருப்பார்.
‘அவரு யாரு தெரியுமா…. எங்க மன்மோகன் சிங்குய்யா, இந்த மண்ணோட சிங்கம்ய்யா… இந்த மண்ண ஆண்டவரு எங்க மனச ஆண்டவரு இந்த மாநிலத்தையே…. என ஒருவர் வசனம் பேசி முடிவதற்குள் விஜய் குறுக்கே புகுந்து தடுத்திருப்பார்.
இதே படத்தில் ‘இரத்தத்தின் இரத்தமே…என் இனிய உடன்பிறப்பே’ என ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை எழுதியவர் அண்ணாமலை. பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் உடையவர். நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அரசியல் பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் ‘இர.இர க்களையும் உ.பிக்களையும்’ ஒன்றிணைத்து கலகம் செய்திருப்பார்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் ‘தலைவா – Time to lead’ என புது வெடியை கொளுத்திப் போட்டார் விஜய். அரசியல்ரீதியாக விஜய்யை அதிகமாக அலைக்கழித்த படம் தலைவாதான். ‘நம்ம ஊரு அரசியல்ல சேர்றதுக்கு எல்லா தகுதியும் உனக்கு இருக்குப்பா…’ என சந்தானம் விஜய்யை பார்த்து வசனமெல்லாம் பேசியிருப்பார். ரசிகர்கள் இப்போது அதிகமாக ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கும் ‘தலைவா.. தலைவா…’ பாடலும் இதே படத்தில்தான் இடம்பெற்றிருக்கும்.

‘பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினாள் வரலாற்றி ஒரு தலைவன் உருவாகுவான். நீதான் என்றும் தளபதி…’ போன்ற வரிகளை எழுதி விஜய் ரசிகர்களை இன்னும் வேகமூட்டினார் நா.முத்துக்குமார். ‘தலைவங்றது நாம தேடிப்போற விஷயம் இல்ல. நம்ம தேடி வர்ற விஷயம். இந்த மக்கள் உங்கள அவங்களுக்காக கூப்பிடுறாங்க..’ அரசியல் நெடி அதிகம் வீசும் வசனங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்.
கத்தியில் விவசாயிகள் தற்கொலை பிரச்சனை. முக்கியமான ப்ரஸ்மீட் காட்சியில் 2G பற்றி ஆவேசமாக வசனம் பேசியிருப்பார். ஒரு கூல்ட்ரிங்ஸ் கம்பெனியை எதிர்த்து இந்த படத்தில் விஜய் கொந்தளித்திருப்பார். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு அந்த கம்பெனியின் விளம்பரப்படங்களில் நடித்திருந்ததே விஜய்தான். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கூல்ட்ரிங்ஸுக்கு விளம்பரம் செய்திருப்பார். இது கத்தி படம் வெளியான போது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், விஜய் இந்த தவறை உணர்ந்து வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு இந்த சர்ச்சையை சுமூகமாக முடித்து வைத்தார்.
புலி படத்தில் கொடுங்கோன்மை மிக்க வில்லியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். நீலாம்பரி கேரக்டருக்கு சொல்லப்பட்ட கதைகள் இங்கேயும் சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் ஒரு கான்ஸ்பிரசியாகவே கடந்து போனது. ஆனால், அதே ‘புலி’ படத்தின் ஆல்பத்தில் மனிதா…மனிதா என்றொரு பாடல் இடம்பெற்றிருக்கும்.
இது ஈழத்தமிழர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் போன்றே தோன்றும்.
‘கூட்டுப் பறவைகளாய் இந்தக் காட்டில் பிறந்தோம் கை வீசி திரிந்தோம்…சிந்தும் வேர்வையினால் நவதானியம் விளைந்தது நம்மாலே
திசையெட்டும்
திசையெட்டும் தெறிக்கட்டும்
திறக்கட்டும் புறப்படு புலி இனமே’ போன்ற வரிகள் ஈழத்தமிழர்களின் வலிகளையும் எழுச்சியையும் பேசுவதாகவே அமைந்தது. தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவான விஷயங்களை படங்களில் வெளிக்காட்டியதன் மூலம் விஜய்யின் மீதான ‘தமிழர்..தமிழ்ப்பாற்றாளர்’ என்கிற இமேஜ் இன்னும் கூடியது. புலி படத்தின் க்ளைமாக்ஸில் விஜய்க்கு மணி முடி சூட்டப்பட்டு செங்கோல் கொடுக்கப்பட்டு மக்களுக்காக நல்லாட்சி கொடுப்பேன் என்பதை போன்றெல்லாம் வசனம் பேசியிருப்பார்.

மெர்சலில் ‘ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே…. வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே..’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய பாடல்தான் விஜய்யின் அரசியல் கீதம். அதே படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனம் பாஜகவை உரசிப்பார்த்தது. பாஜகவினர் விஜய்யின் மத அடையாளத்தையெல்லாம் பொதுவெளியில் எடுத்துப்போட, முதன் முதலாக தன்னை ‘ஜோசப் விஜய்’ என அடையாளப்படுத்தி விஜய் வெளியிட்ட அறிக்கை சரவெடியாக அமைந்தது.

மெர்சலில்தான் இளைய தளபதியிலிருந்து தளபதியாக விஜய் ப்ரமோஷன் ஆனார். இந்த சம்பவத்திற்கு பிறகு, மைக்கேல் ராயப்பனாகவும் ஜே.டி என்கிற ஜான் துரைராஜாகவும் தொடர்ந்து சிறுபான்மையினரின் பெயர்கள் தாங்கிய கேரக்டர்களில் துணிச்சலாக நடிக்க ஆரம்பித்தார் விஜய்.
சர்காரில் ‘ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே…நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை இங்கு அடங்காதோ…’ என பாடல் முழுவதுமே அரசியல்தான். ‘ஏழ்மையை ஒழிக்க செய்யடா… முயற்சியே ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா…’ போன்ற வரிகள் விஜய்க்கு பயங்கர பன்ச்சாக அமைந்தது. படத்திலும் விஜய் ஒரு மாற்று சக்தியாக தேர்தல் அரசியலுக்கு வந்து இங்கிருக்கும் கட்சிகளையெல்லாம் தோற்கடிப்பார். ‘எதிர்க்க ஆளே இல்லைங்றதுதான் ஜனநாயகத்தோட முதல் ஆபத்து.’, போன்ற எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை விஜய் பேசியிருப்பார்.

இலவசங்களை தூக்கியெறிவது போன்ற காட்சி, ஜெயலலிதாவை பிரதிபலிப்பது போன்ற கதாபாத்திரம் போன்றவை அதிமுகவை கடுப்பாக்கியது. சர்கார் படம் ஓடிய திரையரங்குகளில் அதிமுக தொண்டர்கள் விஜய்யின் பேனர்களையெல்லாம் கிழித்து ரகளையில் ஈடுபட்டிருந்தனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் ‘முதலமைச்சரானா நடிக்க மாட்டேன்…’ ‘நெருக்கடி ஏற்பட்டா ஒரு நல்ல தலைவன் தானா வருவான்..’ போன்ற பஞ்ச்களை விஜய் அடித்திருப்பார்.
பிகில் படத்தில் மந்திரி கதாபாத்திரம் ஒன்றுடனான உரையாடலில் ‘இறங்கணும்னு முடிவு பண்ணிட்டா எதை பத்தியும் யோசிக்கமாட்டேன். இறங்கிடுவேன்…’ என உள் அர்த்ததோடு வசனம் பேசியிருப்பார். விஜய் சீக்கிரமே அரசியல் கட்சி தொடங்குவார் என செய்திகள் வெளியான நிலையில் ‘வா தலைவா… வா தலைவா…’ என வாரிசு படத்தின் ஓப்பனிங் பாடல் இடம்பெற்றிருக்கும். ‘நான் ரெடிதான் வரவா…’ என லியோவில் விஜய் பாடி முடித்து சில மாதங்களே ஆன நிலையில் இப்போது அவர் கட்சியே தொடங்கிவிட்டார்.
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாருமே தங்களின் படங்களை தங்களின் அரசியல் இமேஜை வளர்த்துக் கொள்வதற்கான கருவியாகவே பயன்படுத்தியிருக்கின்றனர். விஜய்யும் அந்தப் பாதையில் தவறாமல் நடைபோட்டு எட்ட வேண்டிய இடத்தை எட்டியிருக்கிறார். இனி நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.