புதுடெல்லி: முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானிக்கு (96) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த மாதம் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 50-வது நபராக முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். நமது காலத்தில் வாழும் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவர்களில் அத்வானியும் ஒருவர். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனில் தொடங்கி நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் சிறப்பு வாய்ந்ததாகவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாகவும் இருந்தன.
அரசியல் நாகரிகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். தேச ஒற்றுமை, கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அளப்பரிய பணிகளை செய்துள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணமாகும். அவரிடம் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எனக்கு கிடைத்த பாக்கியம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தாழ்மையோடு ஏற்கிறேன்: இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு எல்.கே. அத்வானி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல, எனது சிந்தனை, கொள்கைகள், வாழ்நாள் பணிக்காக கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். எளிமை, தாழ்மை, நன்றிபெருக்குடன் பாரத ரத்னா விருதை ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த வாழ்க்கை எனக்கானது கிடையாது, எனது நாட்டுக்கானது என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறேன். இந்த நேரத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
பாஜக தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு பாரத ரத்னா விருதை அறிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். வாழ்நாள் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மறைந்த எனது மனைவி கமலாவுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டு உள்ளேன். நமது நாடு மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். புதிய உச்சங்களை தொட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அத்வானியின் மகள் பிரதிபா கூறும்போது, “பாரத ரத்னா விருதால் எனது தந்தை அத்வானி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் அவர் நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷா: நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர் அத்வானி. இந்திய அரசியலில் முன்னோடியாக, முன்மாதிரியாக வாழ்ந்து வருகிறார். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஓய்வின்றி போராடினார். பாஜகவின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்: நானும் அத்வானியும் வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றுகிறோம். எனினும் அத்வானியை மதிக்கிறேன். அவர் சிறந்த நாடாளுமன்றவாதி, சிறந்த மத்திய அமைச்சராக செயல்பட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு: கடின உழைப்பு, தேசத்தின் மீதான பக்தியின் அடையாளமாக அத்வானி விளங்குகிறார். அவர் ஓர் அறிஞர், தேசிய தலைவர். அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது அரவணைப்பு, பாசம் அனைவரையும் கவரும்.
இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட் பட அந்த கட்சியின் மூத்த தலைவர்களும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அத்வானியின் அரசியல் பயணம்: 1927 நவ.8-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் எல்.கே. அத்வானி பிறந்தார். 1942-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1944-ல் கராச்சியில் உள்ள மாடல் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது 1947-ல் அத்வானியின் குடும்பம் டெல்லியில் குடியேறியது. 1947 முதல் 1951 வரை ஆர்எஸ்எஸ் தொண்டராக தீவிரமாக பணியாற்றினார். 1958-63-ம் ஆண்டுகளில் டெல்லி மாநில ஜன சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1960-67-ம் ஆண்டுகளில் ஜன சங்க அரசியல் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1965-ல் கமலாவை திருமணம் செய்தார். அத்வானி-கமலா தம்பதிக்கு பிரதிபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் பிறந்தனர். 1970-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ல் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். 1975-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பெங்களூருவில் அத்வானி கைது செய்யப்பட்டார்.
1977 முதல் 1979 வரை மத்திய தகவல், தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்தார். 1980-86-ல் பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1986, 1988-ம் ஆண்டுகளில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த 1990-ம் ஆண்டில் குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொண்டார். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகித்தார்.