Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான டிப்ரெஷன்… முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு முதல் பிரசவத்துக்குப் பிறகு கடுமையான மன அழுத்தம் இருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், குழந்தையைக் கொஞ்சப் பிடிக்காமல் இரண்டு வாரங்களுக்கு அவதிப்பட்டேன். பிறகு மனநிலை நார்மலானது. இப்போது நான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறேன். இந்த முறையும் அப்படி டிப்ரெஷன் வருமோ என பயமாக உள்ளது. இதைத் தவிர்க்க முடியுமா…. அப்படியே டிப்ரெஷன் வந்தாலும் அதிலிருந்து உடனே மீள முடியுமா?

பதில் சொல்கிறார்  சென்னையைச் சேர்ந்த , காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன்.

சுனிதா மேனன்

சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம். 

பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் ‘பேபி ப்ளூஸ்’ என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை ‘போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்’ என்று சொல்வோம். இன்னும்  சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை ‘பெரி பார்ட்டம் டிப்ரெஷன்’ என்று சொல்வோம். 

பிரசவத்துக்குப் பிறகான ‘போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு’க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

கர்ப்பம்

மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார். 

ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது. முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத் தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

தாய்ப்பால்

போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள். பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.