கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் – அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு,

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது இந்த பேருந்து முனையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் இங்கு புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு இன்று (பிப்.5) அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இம்முனையத்தில் வெளியூர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் பேருந்துகள் (MTC) நிற்கும் இடத்திற்கும் இடையில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு, 6 மாதங்களில் இரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இம்முனையத்தின் எதிர்புறம் உள்ள GST சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் (Sky Walk) ஜன.31 அன்று டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் முகப்பு வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.

இப்பேருந்து முனையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் (Idle Parking for Omni Buses) நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் 300 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மார்ச் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்பேருந்து முனையத்தில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மலிவு விலை உணவகங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். ஏடிஎம் மையங்களும் திறக்கப்படும். குறிப்பாக, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பேருந்து முனையம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.