புதுருவகல பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது குறித்த மாணவர்களால் தங்களின் பாடசாலைக்கு இசைக் கருவிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

தங்கள் பாடசாலைக்கு திடீரென வருகை தந்த விருந்தினர் நாட்டின் ஜனாதிபதி என்பதை அறிந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த சமயத்தில் உலங்குவானூர்திக்கு அருகில் வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் மாணவர்கள் ஈடுபட்டனர். பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டறிந்தார்.

பாடசாலையில் இசைக்கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதன்படி, மிகக் குறுகிய காலத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, டிரம்பெட், டிராம்போன், சாக்ஸபோன், கிளாரினெட், மவுண்டபிள் டெம்பரின் உள்ளிட்ட இசைக்கருவிகள் பரிசளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஞ்ஜித் கீர்த்தி தென்னகோன், வலயக் கல்விப் பணிப்பாளர் கே. ஜே. சுசில் விஜேதிலக, வலயக் கல்விப் பணிப்பாளர் எச். டி.தர்மசிறி, மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய அதிபர் எச். எம். யு. திரு.பி.ஹேரத், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.