சேலம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். வெள்ளி வியாபாரியான இவர், வழக்கம்போல கடந்த 2-ம் தேதி அதிகாலை தன் வீட்டிற்கு அருகே உள்ள கடை ஒன்றில் பால் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த கறுப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, சங்கர்மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த சங்கரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீஸார் விபத்து என வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வந்தனர். இதனிடையே செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் சிலர், `சங்கர் விபத்தில் உயிரிழக்கவில்லை… திட்டமிட்டு வாகனம் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்’ என்னும் தகவலை காவல் நிலையத்தில் அளித்தனர். அதன்மூலம் போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சங்கர் வழக்கம்போல பால் வாங்கிக் கொண்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுமார் அரை மணி நேரமாக சங்கரை எதிர்ப்பார்த்து நின்று கொண்டிருந்த கறுப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, அவர் கடந்து சென்றதும், அவரைப் பின் தொடர்ந்து வேகமாக வந்து அவரை மோதி தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ள காட்சிகள் பதிவாகியிருந்தது.
சங்கரைக் கொலைசெய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அப்பகுதியில் காத்திருந்து அவரை நோட்டமிட்டு, அதன் பின்னர் விபத்து பாணியில் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற சந்தேகத்தின்பேரில், போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.