மும்பை: அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சரத் பவார் மற்றும் அஜித் பவார் தரப்புக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அப்போது அமைச்சர்களாக பதவியேற்றனர். அக்கட்சியின் 53 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் அஜித் பவார் பக்கம் உள்ளனர். இதையடுத்து, சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இருவேறு தலைமையின் கீழ் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் அதுகுறித்து இறுதி முடிவை அறிவித்துள்ளது.
அஜித் பவர் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி. அதனால் தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை அவருக்கே சொந்தம். சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களை அவர் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் அஜித் பவார் தரப்புக்கு கிடைக்கும். முன்னதாக, சிவசேனா கட்சி பிளவுபட்ட போது அக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.
“சட்டப் போராட்டம் நடத்துவோம். சிவசேனாவுக்கு நடந்தது தான் எங்களுக்கும் இன்று நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியாகவே இருந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் தான். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவி கட்சி மற்றும் குடும்பத்தை பிரிக்கிறது இந்த அரசு. இது நம் நாட்டில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இதை எதிர்த்து சமர் செய்தாக வேண்டும்” என சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே எதிர்பார்த்த முடிவு தான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
‘தேர்தல் ஆணையத்தின் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்’ அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.