திருவண்ணாமலை: “திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் திமுக தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட் கொடுத்தால் நீட் தேர்வு வேண்டாம் என நானும் சொல்கிறேன்” என தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று (பிப். 5) இரவு நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தர் அவர்களால் பாடல் பெற்ற திருத்தலம் செய்யாறு வேதபுரீஸ்வரர் திருகோயில். பிற கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சூரிய வெளிச்சம் விழும். ஆனால், வேதபுரீஸ்வரர் கோயிலில் தினசரி சூரிய வெளிச்சம் விழக்கூடிய பிரசித்த பெற்ற கோயில். கருடன் பூஜை செய்ததால் பட்டீஸ்வரர் ஆலயமும் உள்ளன. ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டி, உலக புகழ்பெற்றதாகும். மக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீட்டை பிரதமர் மோடி கடந்தாண்டு வழங்கி உள்ளார்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரிடம் கருணையை எதிர்பார்க்க கூடாது, ஆசையை தூண்ட வேண்டும் என்ற வசனம் வரும். அதுபோல் மக்களிடம் ஆசையை தூண்டிவிட்டு, திமுக அரசு ஏமாற்றுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் கல்லூரி கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, கல்வி கடனை தள்ளுபடி செய்தால் ரூ.16,500 கோடியை தமிழக அரசு கொடுக்க வேண்டும். அரசாங்கத்திடம் ரூ.2 கோடி பணமில்லை.
கடன் வாங்கி ஆட்சி நடத்துகின்றனர். ரூ.8.23 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.69 கோடி கடனை திமுக அரசு வாங்கி உள்ளது. செய்வதற்கு பணமும் இல்லை, மனமும் இல்லை என்பதை தெரிந்தே, மக்களின் ஆசையை தூண்டி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில், இதே வாக்குறுதியை அளித்துள்ளனர். ஒரே வாக்குறுதியை இரண்டு முறை கொடுத்து ஏமாற்றி உள்ளனர்.
2019-ல் நாடாளுமன்ற தேர்தல் , 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஏமாற்றி உள்ளனர். ஏழை மாணவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு மட்டுமே சாத்தியம் என நமக்கு தெரியும். 2-வது முறையாக ஓரே பொய்யை 2 முறை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். நீர் தேர்வை ரத்து செய்வதாக கூறி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி சேலம் திமுக இளைஞரனி மாநாட்டில் குப்பையில் போட்டுள்ளனர். செய்யாறு விவசாயி மகன் கவிபிரியா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கல்வியில் மூலமாக முன்னேற வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். எளிதாக எதுவும் கிடைக்காது. கடின உழைப்பை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும், காலமும் நமக்கு இருக்கிறது.
நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அமைச்சர்களில் கே.என்.நேரு பிளஸ் 2, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் 8-ம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தோல்வி, அன்பரசன் பிளஸ் 1, அனிதா ராதாகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு, சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பிளஸ் 2, காந்தி பத்தாம் வகுப்பு, மூர்த்தி பிளஸ் 2, சேகர் பாபு பத்தாம் வகுப்பு, செஞ்சி மஸ்தான் 8-ம் வகுப்பு படித்துள்ளனர். குறைவாக படித்துள்ளதை தவறாக பேசவில்லை.
குறைவாக படித்த மேதைகள் உள்ளனர். படிப்பை பற்றி தெரியாதவர்கள் எதற்காக நீட் தேர்வை பற்றி பேச வேண்டும் என்பதை குறையாக பேச வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த கல்லூரிக்கு சென்றார், எந்த கல்லூரியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார் என யாருக்கும் தெரியாது. அரசியலில் தூய்மை, நேர்மை என்றால் என்வென்று தெரியாதவர்கள் நீட்டை எதிர்த்து பேசுகின்றனர்.
திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரியில் திமுக தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக மருத்துவ படிப்பை கொடுப்போம் என சொல்லுங்கள், நானும் நீட் தேர்வு வேண்டாம் என சொல்கிறேன். இவர்களது கல்லூரிகளில் ஒரு இடத்தை ரூ.1 கோடி, ரூ.2 கோடிக்கு விற்க வேண்டும் என்பதற்காக நீட் வேண்டாம், நீட் ஒழிப்பு, நீட் எதிர்ப்பு என்ற நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் முறையீடு: செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு விளை நிலங்களை கொடுக்க முடியாது என கூறி 200 நாட்களுக்கு மேலாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 1947-க்கு பிறகு, இந்திய வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட முதல் அரசு, திமுக அரசு. பாஜக தெரிவித்த கண்டனத்தை தொடர்ந்து குண்டர் சட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.
விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளை நீக்க, உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்யும் என்ற வாக்குறுதியை என் மண், என் மக்கள் யாத்திரையில் உறுதி அளிக்கின்றோம். செய்யாறில் புதிய வேளாண்மை கல்லூரி தொடங்கவும் உத்தரவாதம் அளிக்கிறோம். 2024-ல் பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி, 3-வது முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும்” என்றார்.