கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் My V3 Ads நிறுவனத்தின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்த்தால் வருமானம் ஈட்டலாம் என்று ஆசை காட்டி மோசடி செய்தது, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதனடிப்படையில் அவர் கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சக்தி ஆனந்தன், “என் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. எனது தரப்பு விளக்கத்தை அளித்தேன். பிரபலம் ஆனாலே பிராபளம் வரதான் செய்யும். V3OnlineTV மீது புகாரளித்துள்ளனர். அந்த நிறுவனத்தில் நானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல், தற்போது அவர்கள் புகாரளிக்க நோக்கம் என்ன. எங்கள் நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு இது குறித்து பேசினால், தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம். இத்தனை நாள்கள் அவர்கள் கோமாவில் இருந்தார்களா. விளம்பரத்துறையும் வியாபாரத்துறையும் எத்தனை நாள்கள் இருக்குமோ, என் நிறுவனமும் அவ்வளவு நாள்கள் இயங்கும்.
நீலாம்பூர் பகுதியில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை. உறுப்பினர்களே தன் எழுச்சியாக வந்தனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியை மட்டுமே நான் செய்தேன். மீண்டும் மீண்டும் மக்களை நான் அழைத்தேன் என அசிங்கப்படுத்துகிறார்கள். அப்படி சொல்பவர்கள் யாரேனும் அனுமதி பெற்று தந்தால் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை திரட்டி காட்டுகிறேன். அரசியல் பின்புலம் இல்லாமல் இத்தனை பேர் தன்னெழுச்சியாக வந்தபோதே நான் வெற்றி அடைந்துவிட்டேன். எங்கள் நிறுவனத்தின் பொருள்கள் போலி என்பவர்கள் அதனை நிரூபிக்கட்டும். அவை போலி என்றால் அதற்கான தரச்சான்றிதழ்களை அளித்தவர்கள் யார். இவை எல்லாம் பாரம்பர்ய மருந்துகள். இதனை விற்பதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு.

மக்கள் அவர்களாகவே விரும்பி வாங்கி உட்கொள்கிறார்கள். அந்த பொருள்கள் தயாரித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தால், அதை அதிக பார்வையாளர்கள் பார்ப்பார்களோ அதுபோல எதிர்மறை விமர்சனங்களால் எங்கள் நிறுவனமும் உயர்ந்துள்ளது. எங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருள்களை மட்டுமே வாங்குகிறார்கள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY