லண்டன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 75, முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு, ‘ப்ராஸ்டேட்’ வீக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நடந்த பரிசோதனைகளில், மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால், என்ன விதமான புற்றுநோய் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
டாக்டர்களின் ஆலோசனையின்படி, மன்னர் தன் பொதுப் பணிகளை ஒத்திவைப்பார் என்றும், அத்தியாவசிய ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் உள்ளிட்ட பணிகளை தொடர்வார் என, பிரிட்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின், சில தினங்களுக்கு முன் நடந்த தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமீலாவுடன் பங்கேற்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னர் நலமாக இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைவோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
‘மன்னர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன். அவர் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
‘மக்களின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் அவரை நலமுடன் வைத்திருக்கும்’ என, பிரிட்டன் மன்னர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை பெற்று அதில் இருந்து முழுமையாக குணம் அடைய அசாத்திய நம்பிக்கையும், தைரியமும் தேவை.
‘மன்னர் சார்லஸ் விரைவாக குணமடைய பிரிட்டன் மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறேன்’ என, தெரிவித்துள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தை பெற இந்திய மக்களுடன் இணைந்து தானும் பிரார்த்திப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்