லாஸ் ஏஞ்சல்ஸ்: தமிழகத்தை சேர்ந்த கடம் இசைக்கலைஞர் செல்வகணேஷ் விநாயக்ராம், பாடகர் சங்கர் மகாதேவன், தபலா இசைக்கலைஞர் ஜாகீர் உசைன் உட்பட ஐந்து இந்திய இசைக் கலைஞர்கள் கிராமி விருது வென்றனர்.
திரைப்படத் துறையில் ஆஸ்கர் விருதைப் போல, இசைத் துறையில் கிராமி விருது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக அளவிலான இசைக்கலைஞர்கள் மற்றும் குழுக்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக, 2008ல் இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நம் நாட்டை சேர்ந்த சக்தி இசைக்குழு விருது வென்றது.
இந்த இசைக்குழு வெளியிட்ட, ‘திஸ் மொமென்ட்’ என்ற இசை ஆல்பத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த கிடார் இசைக்கலைஞர் ஜான் மெக்லாலின் துவங்கிய சக்தி என்ற இசைக்குழுவில், நம் நாட்டை சேர்ந்த தபலா கலைஞர் ஜாகீர் உசைன், பாடகர் சங்கர் மகாதேவன், தமிழகத்தை சேர்ந்த கடம் இசைக்கலைஞர் செல்வகணேஷ் விநாயக்ராம், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஐந்து பேருக்கும் கிராமி விருது வழங்கப்பட்டது. இது தவிர, சர்வதேச இசைப் பிரிவில், ‘பாஷ்தோ’ என்ற இசை ஆல்பத்துக்கும், சமகால வாத்திய இசை ஆல்பத்துக்கான பிரிவில் ‘ஆஸ் வீ ஸ்பீக்’ என்ற ஆல்பத்துக்காகவும், ஜாகீர் உசைன் இரண்டு விருதுகளை வென்றார்.
இதே பிரிவில், நம் நாட்டை சேர்ந்த பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சவுராசியாவின் உறவினர் ராகேஷ் சவுராசியா, இரண்டு விருதுகளை வென்றார்.
இந்த ஆண்டு கிராமி விழாவில், இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் விருதுகளை வென்றுள்ளது, சர்வதேச இசை உலகில் கவனம் பெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்