தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மசாஹிர் அலி, அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் இந்தியனா வெஸ்லே பல்கலைக்கழகத்தில் ஐ.டி முதுகலைப் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி சையது மசாஹிர் அலி, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
இது குறித்து சையது மசாஹிர் அலி, ரத்தம் சொட்ட சொட்ட வெளியிட்ட வீடியோவில், “நான் எனக்கான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லவிருந்தபோது, 4 பேர் என்னைக் கடுமையாகத் தாக்கினர். என்னிடம் இருந்த செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர். Please help me…” எனப் பதிவிட்டிருக்கிறார். இதற்கிடையில், சமூக ஊடகங்களில் மற்றொரு சிசிடிவி வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. அதில், சையது மசாஹிர் அலி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் துரத்துவது,பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் சையது மசாஹிர் அலியின் மனைவி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உதவுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்காவில் படிப்புக்காகச் சென்ற என் கணவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான உரியச் சிகிச்சையைக்கூட அந்த அரசு வழங்கவில்லை. எனவே, என் கணவரின் சிகிச்சைக்கு இந்திய அரசு உரிய ஆவணம் செய்யவேண்டும்.
CCTV footage of the attack on an Indian student in Chicago pic.twitter.com/tkPTVKvLPm
— Sidhant Sibal (@sidhant) February 6, 2024
மேலும், என் கணவரைப் பார்ப்பதற்கு உடனடி விசா வழங்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறைக்குக் கோரிக்கை வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது மனைவியுடன் தொடர்பில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்வோம்.
வழக்கை விசாரிக்கும் உள்ளூர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு கவனப்படுத்தி வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 29-ம் தேதி இந்திய மாணவரான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில், ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
ஜனவரி 30-ம் தேதி, பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல்போன சில நாள்களில், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வாரம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்குள் இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.