பெங்களூரு, : மத்திய அரசின் ‘பாரத் அரிசி’யை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று அறிமுகப்படுத்தினார். 5 கிலோ, 10 கிலோ பைகளில் கிடைக்கும்.
திட்டத்தை நேற்று துவக்கி வைத்து எடியூரப்பா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்; கோதுமை 50 ரூபாய்; துவரம் பருப்பு, 60 ரூபாய்; பாசி பருப்பு 90 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டம் நாட்டின் வரலாற்றில் இடம் பெறும். ஏழை, நடுத்தர மக்களை சென்றடையும். தேர்தலுக்கு முன், 10கிலோ அரிசி வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால் ஐந்து கிலோ தான் வழங்கி வருகிறது.
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்து உள்ளது. என்.ஏ.எப்.இ.டி., எனும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைபடுத்தல் கூட்டமைப்பு மூலம், ஏழு நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும்.
இந்த அரிசி, 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும். பெங்களூரில் இன்று (நேற்று) துவங்கிய திட்டம், நாளை முதல் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் துவக்கப்படும்.
உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்வதன் மூலம், ஒரு முறை 10 கிலோ அரிசி பெற்று கொள்ளலாம். இதை வாங்க பி.பி.எல்., ஏ.பி.சி., ரேஷன் கார்டுகள் தேவையில்லை.
இந்த அரிசியை, ரிலையன்ஸ், பிளிப்கார்ட், பிக் பாஸ்கட் மற்றும் ஆன்லைனிலும் வாங்கலாம். இன்னும் ஒரு வாரத்தில், மற்ற கடைகளிலும் அரிசி கிடைக்கும்.
யஷ்வந்த்பூரில் உள்ள என்.சி.சி.எப்., என்ற இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட்டின் பிரதான கிடங்கில் இருந்து பெங்களூரில் உள்ள 50 பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அரிசியை, வீடு வீடாக வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்