ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா, வங்காளதேசம் கூட்டு சாம்பியன்

டாக்கா,

5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பின்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் தகுதி பெற்றன.

அதன்படி நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. திரில்லிங்காக நடைபெற்ற இந்த போட்டி வழக்கமாக வழங்கப்படும் நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து போட்டியின் முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதைத்தொடர்ந்து சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.

இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய ‘டாஸ்’ முறையை கொண்டு வந்தனர்.

டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர்.

இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாக பெற்றுக் கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.