விண்வெளி நிலையம் அமைக்க பூர்வாங்க பணிகளை தொடங்கியது இஸ்ரோ

சென்னை:

விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்தி உள்ளன. அதேபோல் சீனாவும் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இதேபோன்று 3-வதாக இந்தியாவும் தமக்கு சொந்தமான விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு பணியில் இறங்கி உள்ளது.

விண்வெளியில் இந்த நிலையத்தை அமைக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. முழுமையான திட்ட அறிக்கைகள் எல்லாம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது.

இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு, 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் தொடர்பான கருத்துருவாக்க கட்டத்தில் உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

இந்த விண்வெளி நிலைய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 25 டன் எடையை கொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு, 2025-ம் ஆண்டு ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்காக எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. நிதிநிலை குறித்து போதுமான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஒதுக்கப்படும். இஸ்ரோ இந்த நிலையத்தை நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், விண்வெளியில் தாங்கள் விரும்பும் புதிய உயரங்களை இஸ்ரோ எட்டும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.