வெள்ளை அறிக்கை: `ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிகிறது!' – சு.வெ

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஏற்கெனவே அறிவித்ததுபோல மத்திய அரசின் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இன்னொருபக்கம், இது `வெள்ளை அறிக்கை அல்ல, பொய் அறிக்கை’ என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிந்துகொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

வெள்ளை அறிக்கைமீதான விவாதத்தின்போது உரையாற்றிய சு.வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்துக்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோலத்தான் சில கட்சிகளும். தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையைப் பற்றி நாங்கள் பேசினால், அவர்கள் (பாஜக) 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதுவைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த காலத்தைக் கழித்துவிட்டால் அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை. இந்த தேர்தல் யுத்தத்தை தொடங்கும்போதே 10 ஆண்டுகளுக்குப் பின்னால் போய் நின்றுகொண்டிருப்பது இந்த அரசின் தோல்வி.

சு.வெங்கடேசன்

2014-ல் இந்தியாவில் 70 பில்லியனர்கள் இருந்தார்கள். இன்று 170 பில்லியனர்கள் இருக்கிறார்கள். தனிநபர் சராசரி வருமானம் பட்டியலில் உலக அளவில் 142 வது இடம், மனிதவள குறியீட்டில் 132-வது இடம், மகிழ்ச்சிக் குறியீட்டில் 136 -வது இடம், சர்வதேச பட்டினி குறியீட்டில் 122 இடங்களில் 107-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சியில் திளைக்கிற இந்த நாட்டில், மக்களின் மகிழ்ச்சி கடலில்தான் மூழ்கியிருக்கும்.

இந்த புள்ளி விவரங்களைச் சொன்னால், இதை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். நீங்களே தேர்வெழுதிக்கொள்வீர்கள், நீங்களே மதிப்பெண் இட்டுக்கொள்வீர்கள். கேட்டால், மதிப்பெண் விஷயத்தில் தவறிழைத்தால் 10 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை என புதிய சட்டத்தைக் கொண்டுவருவீர்கள்.

சமையல் காஸ் விலையுயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா… 10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரி 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது. டீசல் மீதான வரி 9 மடங்கு உயர்ந்திருக்கிறது. யமுனையின் கரை சாந்திவனத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் நேருதான் இதற்கும் காரணமா…

சு.வெங்கடேசன்

கார்ப்பரேட்டுகளின் வரி 2014-ல் 33 சதவிகிதம் இருந்தது. தற்போது உங்கள் ஆட்சியில் அது 22 சதவிகிதம் மட்டுமே. 11 சதவிகித்தை கார்ப்பரேட்டுகளுக்கு குறைத்திருக்கிறீர்கள். 1 சதவிகிதம் 50,000 கோடி, 11 சதவிகிதம் என்றால் எத்தனையாயிரம் கோடி என்று நிதியமைச்சர் இந்த அவையில் கணக்கு முன்வைப்பாரா… உங்களின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.