இந்தாண்டு தான் அதிகம்
பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் பிரதமரின் நேரடி பரிந்துரையின்படி இந்த விருது அளிக்கப்படுகிறது. கடந்த 1954ல் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் என்ற இரண்டு உயரிய விருதுகளை மத்திய அரசு நிறுவியது.
ஒரு சில ஆண்டுகள் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், சில ஆண்டுகளில் யாருடைய பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படாமலும் இருந்துள்ளன.
கடைசியாக, 2019ல் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. பூபேந்திர குமார் ஹஸாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா அதே ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், சமூக சீர்திருத்தவாதியுமான கர்ப்பூரி தாக்குர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இந்த விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் விவசாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் உணவு உற்பத்தியை உயர்த்தியவரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன் அதிகபட்சமாக 1999ல், ஜெயப்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் அமர்த்யா சென், லோக்பிரிய கோபிநாத் போர்டோலாய், பண்டிட் ரவிசங்கர் என நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் பின், இந்த ஆண்டு ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நிறுவப்பட்டதில் இருந்து இதுவரை, 53 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
நால்வர் அரசியல்வாதிகள்
நடப்பாண்டு பாரத ரத்னா விருது பெறும் ஐந்து பேரில், நால்வர் அரசியல்வாதிகள்; ஒருவர் விஞ்ஞானி. எந்த கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறதோ, அதை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு விருது வழங்குவது வாடிக்கை. பிரதமர் மோடி அதை மாற்றி, அவரது கட்சியை சாராத மூன்று தலைவர்களுக்கு விருது அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் இது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்