மூணாறு:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கேரள அரசு ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கவில்லை. இதனால் வறுமைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதியினர் கருணை கொலைக்கு தயாராக உள்ளதாக போஸ்டர் ஒட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் மாநிலத்தில் பல்வேறு துறையினருக்கு மாத ஊதியம் காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. விதவை, முதியோர் உள்பட அனைத்து பென்ஷன்கள் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
ஏற்கனவே இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே இருநூறு ஏக்கரைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி மரியகுட்டி நவ.7ல் மண்சட்டி ஏந்தி யாசகம் பெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கி பினராயிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் வண்டிபெரியாறைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி பொன்னம்மா இருதினங்களுக்கு முன்பு வண்டி பெரியாறு, வள்ளக்கடவு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போக்குவரத்து தடைபட்டதால் போலீசார் பொன்னம்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் ஒன்றரை மணி நேர போராட்டத்தை பொன்னம்மா கைவிட்டார்.
கருணை கொலைக்கு தயார்
அடிமாலி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குழாமாம்குழி குடியைச் சேர்ந்தவர் சிவதாசன் 72, இவரது மனைவி ஓமனா 63, மாற்றுத் திறனாளியாவார். இவர்கள் வன விளைபொருட்களை சேகரித்து அடிமாலி அருகே அம்பலபடியில் பெட்டிக் கடையில் வைத்து விற்கின்றனர்.
வனவிலங்கு நடமாட்டம், வயது முதிர்வு உள்பட பல்வேறு காரணங்களால் வனங்களில் வன பொருட்களை சேகரிக்க முடியவில்லை. இருவருக்கும் முதியோர் பென்ஷன் ஐந்து மாதங்களாக முடங்கியது. மருத்துவம் உள்பட அத்தியாவசிய செலவை சமாளிக்க இயலாததால் ‘கருணை கொலைக்கு தயார்’ என பெட்டி கடையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. பென்ஷன் நிறுத்தப்பட்ட பிரச்னை பினராயி அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement