Pakistan Election Results 2024 Live Updates: Jailed ex-PM Imran Khans independents leads | பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: முன்னிலையில் இம்ரான் கட்சி வேட்பாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (பிப்.,9) எண்ணப்படுகின்றன. அதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று பொது தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புக்கு நடுவே நடந்த ஓட்டுப் பதிவின்போது, இணைய மற்றும் மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டன. மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியைச் சேர்ந்தவர்களால் இந்த 70 இடங்களும் நிரப்பப்படும்.

பதிவு செய்யப்பட்ட 167 கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 5,121 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, மற்றொரு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவியது.

முன்னிலை

இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், அங்கிருந்து வரும் தகவல்களின்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆகியவை தலா 47 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. முத்தாஹிதா குவாமி இயக்கம் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியின் சின்னமான பேட் சின்னத்தை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பேட் சின்னத்தை ரத்து செய்தது செல்லும் என அறிவித்தது. இதனால் அக்கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். ஊழல் வழக்கில் சிறை, சின்னம் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இம்ரான் கான் இருந்தாலும், அவரது கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் இருப்பது பாகிஸ்தான் அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.