நடிகர் விஜய், இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அவரது அடுத்த படமான Thalapathy 69 இயக்கப் போவது வெற்றிமாறன் என்றும், கார்த்திக் சுப்புராஜ் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் விஜய் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் எந்த அளவில் இருக்கின்றன. இது குறித்து விஜய் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இங்கே.

தமிழக வெற்றி கழகம் என்று கட்சி தொடங்கிய விஜய், அந்த அறிவிப்பின் போது ”அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.” என்று தெரிவித்திருந்தார். இந்த செய்திக்குப் பிறகு விஜய்யின் 69 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற பேச்சு கிளம்பியது. வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, வினோத், நெல்சன் என விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் இவர்களில் ஒருவர் தான் என பேச்சு கிளம்பியது. இப்போது வெற்றிமாறன் தான்.. கார்த்திக் சுப்புராஜ் தான் என சமூக வலைதளங்களில் சொல்லி வருகிறார்கள்.

வெற்றிமாறன் முன்பு விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூட, `விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறேன். அவர்கள் தரப்பில் ஓகே. நான் என் கமிட்மென்ட்களை முடிக்க வேண்டும்’ எனச் சொல்லியிருந்தார். வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லி, ஐந்து வருடங்கள் இருக்கும். ஆனால் அதன்பின் இருவரும் பணியாற்றும் சூழல்கள் உருவாகவில்லை.
இந்நிலையில் இன்னொன்றையும் சொல்கிறார்கள். வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களுக்கு பொறுமையாக கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார். அது விஜய்க்கு செட் ஆகாது. காரணம், 2026ல் சட்டமன்ற தேர்தல் வருவதால், அதற்குள்ளாக ‘தளபதி 69’ படத்தையும் முடித்துவிட்டு, அரசியலுக்கும் தயாராக வேண்டும். ஆகையால் குறுகிய காலத்தில் படம் பண்ணும் இயக்குநர் தான் விஜய்யின் சாய்ஸாக இருக்கும்.

கார்த்திக் சுப்புராஜ், விஜய்யிடம் மூன்று முறை கதை சொல்லியிருக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ சமயத்திலேயே விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறார். அந்த லைன் திருப்தி இல்லாமல் போனதால், அடுத்தடுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்யிடம் கதை சொல்லி வந்தார். இந்நிலையில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி பெற்றதில், சக்சஸ் கொடுத்த இயக்குநராக கார்த்திக் சுப்புராஜ் சாய்ஸில் இருக்கிறார்.
நெல்சன், ‘ஜெயிலர் 2’வில்தான் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘மெர்சல்’ படத்தின் போதே, ‘உங்களுக்கு அடுத்து ஒரு படம் தருகிறேன்’ என விஜய் சொல்லியிருக்கிறார். அதைப் போல, சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100 படம் விஜய் படமாக தான் இருக்க வேண்டும் என ஆர்.பி.சௌத்ரியும் விரும்பி வருகிறார். விஜய் எந்த இயக்குநரை கை காட்டினாலும், அவருடன் பணியாற்ற ‘பீஸ்ட்’ தயாரிப்பு நிறுவனமும் காத்திருக்கிறது. ஹெச்.வினோத்துக்கு தீரன் 2 அடுத்து தனுஷை வைத்து இயக்கும் படம் என்ற பேச்சு இருப்பதால், இந்தப் பட்டியலில் வினோத்தும் இல்லை. ‘மெர்சல், ‘தெறி’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லியும் அடுத்து விஜய்யை இயக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது.

நடிகராக இது கடைசி படம் என்பதால், விஜய் தனது அரசியலுக்கு தூணாக அமையும் கதையையே தேர்ந்தெடுப்பார். அனேகமாக அட்லி அதற்கு பொருத்தமானவர் என்றும், இந்த பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸிற்கும் ஒரு வாய்ப்பு அமையலாம் என்றும் சொல்கிறார்கள். மேலும் விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரமணா அவருக்கு பிரேக்கிங் படமாக அமைந்தது. தெலுங்கிலும் சிரஞ்சீவி கட்சித் தொடங்குவதற்கு முன்பாகவும் முருகதாஸ் படம் நலல் பேரை பெற்றுத் தந்தது. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்துக்கான வேலைகளில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘கத்தி’, ‘துப்பாக்கி’, ‘சர்கார்’ என விஜய்க்கு பேசப்பட்ட படங்களைக் கொடுத்தவர் ஏ.ஆர் முருகதாஸ் என்பதால் அவரது பெயரும் லிஸ்ட்டில் இருக்கிறது.
ஆக, தளபதி 68 ஆன ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதால், ‘தளபதி 69’ படத்தை பற்றி மார்ச் மாதத்தில் அறிவித்து விடுவார்கள் என்கின்றனர். அரசியலுக்கு முன்பான படம், அதில் எந்தப் பிசகும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது விஜய் தரப்பு. இத்தனை இயக்குநர்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதைப் போலவே, தயாரிப்பு நிறுவனமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்கு முன் இந்த இயக்குநர்களில் ஒருவரை தான் டிக் செய்வார் என்கிறார்கள். கூடிய விரைவில் அந்த அறிவிப்பும் வந்துவிடும் என்கின்றனர்.
விஜய்யின் தளபதி 69 படத்தை இந்த இயக்குநர் இயக்கினால் நன்றாக இருக்கும் என நீங்கள் விரும்பும் இயக்குநரின் பெயரை கமென்ட்டில் பதிவிடுங்கள்.