பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன், நரசிம்ம ராவ், சௌத்ரி சரண் சிங் ஆகியோருக்கு நேற்று பாரத ரத்னா விருது அறிவித்தது. காங்கிரஸும், இந்த பாரத ரத்னா அறிவிப்பை வரவேற்றது. இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில், சௌத்ரி சரண் சிங்கின் பேரனும், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சிங், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து விலகினார். மேலும், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணையவிருப்பதாகவும் பேச்சுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

இப்படியிருக்க, சௌத்ரி சரண் சிங்கை அவமதித்துவிட்டதாக ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கண்டித்த நிகழ்வு, உண்மையில் கார்கே அவ்வாறு நடந்துகொண்டாரா என்று விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, எப்போதும்போல ராஜ்ய சபா அவை கூடியது. அப்போது, சௌத்ரி சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சிங்கை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேச அனுமதித்தார். அதன்படி, எம்.பி ஜெயந்த் சிங்கும் தன்னுடைய தாத்தா சௌத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா அறிவித்து கௌரவித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் பேசி முடித்ததும், காங்கிரஸ் தலைவர் கார்கே எழுந்து ஜக்தீப் தன்கரை நோக்கி, “தலைவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிப்பது குறித்து அவையில் இன்று எந்த விவாதமும் இல்லை. அவர்களை நான் மதிக்கவும் செய்கிறேன். அதேசமயம், ஒரு பிரச்னை குறித்து எம்.பி கேள்வியெழுப்ப விரும்பினால், எந்த விதியின் கீழ் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அப்படியிருக்க எந்த விதியின் கீழ் ஜெயந்த் சிங் பேச அனுமதிக்கப்பட்டார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர நீங்கள் விரும்பும் போதெல்லாம் அல்ல” என்று கூறினார்.

உடனே ஜக்தீப் தன்கர், “சௌத்ரி சரண் சிங்கை நீங்கள் கிட்டத்தட்ட அவமதித்துவிட்டீர்கள். சௌத்ரி சரண் சிங் விவகாரத்தில் இந்த அவைக்குள் இது போன்ற சூழலை உருவாக்கி, நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயியையும் காயப்படுத்துகிறீர்கள். இது போன்ற பாவனையைப் பயன்படுத்தாதீர். இதற்காக வெட்கி தலைகுனிய வேண்டும். அவரை அவமதிப்பதை ஒருபோதும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பொது வாழ்க்கை, நேர்மை, விவசாயிகளுக்கான அர்ப்பணிப்புக்காக அவர் அறியப்படுகிறார்” என்று கார்கேவை கண்டித்தார்.

இன்னொருபக்கம், கார்கே தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தினார்.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மக்களவையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு பேசும்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்ட விவகாரத்தில், பட்டியலினத்தவரை தி.மு.க அவமதித்துவிட்டதாக அவையில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்.பி-க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.