பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் – இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை: வெற்றி பெற்றதாக நவாஸ் ஷெரிப் அறிவித்ததால் பதற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆனால்,தனது கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக நவாஸ் ஷெரிப் அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 266 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில்,சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி போட்டியிடதடை விதிக்கப்பட்டது. அதனால்அவரது கட்சியினர் சுயேச்சையாக போட்டியிட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிட்டன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தனிப் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை. நேற்று மாலை நிலவரப்படி 136 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின.

இதில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பிலாவல் புட்டோவின் பிபிபிகட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனது கட்சி பாகிஸ்தான் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரிப் நேற்று மாலை அறிவித்தார். ‘‘தேர்தலில் பிஎம்எல்-என் கட்சிதனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. இன்று அனைவரது கண்களிலும் ஒளியை பார்க்கிறேன்’’ என்று வெற்றி உரையும் நிகழ்த்தினார். இதனால், பதற்றமான சூழல் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.