கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ.1.77 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவவதும் உள்ள மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும், மருத்துவக் கட்டடங்களை துரிதமாக கட்டித் தரும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வரை 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

கல்லூரிகள் தொடங்கியதற்கு பிறகு அவற்றிற்கு நிதி ஆதாரங்கள் தந்து ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 500, 600, 700 படுக்கைகள் கட்டித் தரப்பட்டன. கிருஷ்ணகிரி, அரியலூர், விருதுநகர், திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.300, ரூ.400 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இன்னும் நாகப்பட்டினம், ஊட்டி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டியுள்ளது. மருத்துவக் கல்லூரி திறப்பது மட்டுமே மருத்துவத்துறையின் வேலையல்ல.
தமிழகத்தில் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில் 37 அரசு கல்லூரிகளாகும். கடந்த 2011-ம் ஆண்டிலேயே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவித்தவர் முன்னாள் முத்லவர் கருணாநிதி. தமிழகத்தில் பெரம்பலூர், புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார். ‘தமிழக பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ என குற்றம்சாட்டியது பற்றி கேட்கிறீர்கள்.

மா.சுப்பிரமணியன்கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15 முறைக்கும் அதிகமாக டெல்லி சென்று மருத்துவத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். தி.மு.க ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம். மருத்துக் கல்லூரி தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை ஆதாரங்களுடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.