“மோடி மீண்டும் பிரதமராக ஓபிஎஸ் விரும்புகிறார்” – அண்ணாமலை

சென்னை: “பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மற்ற கட்சிகளின் உட்கட்சி பிரச்சினைகளில் பாஜக எப்போதும் தலையிடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். சென்னையில் நாங்கள் கெட்ட பெயர் வாங்க விரும்பவில்லை. ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாளை சென்னை வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

எல். முருகன் நாடாளுமன்றத்தில் பதில் கூறும்போது, அதை ஏற்பதும் ஏற்காததும் டி.ஆர்.பாலுவின் விருப்பம். டி.ஆர்.பாலு தலைமைச் செயலாளரை பார்த்துவிட்டு வெளியே வந்து “நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அண்ணன் டி.ஆர்.பாலு பேசிய விஷயம், அவருடைய உடல் மொழி, அதாவது எல்.முருகனைப் பார்த்து, இந்த அரங்கத்தில் இருப்பதற்கே உனக்கு தகுதி இல்லை என்று கூறுகிறார். அவர் “அன்ஃபிட்” என்று கூறினால் நாங்கள் அதை எந்தக் கோணத்தில் எடுத்துக் கொள்வது? அப்போது சமூக நீதி இல்லையா? முருகனிடம் காழ்ப்புணர்ச்சியோடு டி.ஆர்.பாலு நடந்து கொண்டது சரியா?” என்றார் அண்ணாமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.