புதுடில்லி,ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் எதிர்க்கட்சியாக உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் ஒருசேர நடைபெற உள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க இரு கட்சிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
சமீபத்தில், தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோரை டில்லியில் சந்தித்தார்.
அப்போது, லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, நேற்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.
அப்போது, நீண்டகால கோரிக்கையான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
அப்போது, வரும் தேர்தலில், பா.ஜ.,வுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்., கூட்டணி அமைக்கும் தன் விருப்பத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தற்போது மக்களிடையே எதிர்ப்பு அலை எழுந்துள்ளதால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
எனினும், ஆந்திராவில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பையும் பா.ஜ., வெளியிடாமல் மவுனம் சாதித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்