புதுடில்லி::டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், ‘பிங்க் லைன்’ வழித்தடத்தில் உள்ள உயர்நிலை நிலையங்களில் கட்டமைப்பை ஆய்வு செய்ய அதன் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு டில்லி கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவரின் ஒரு பகுதி நேற்று முன் தினம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் குமார் நேற்று அதிகாரிகள், அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, விகாஸ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவு:
மெட்ரோ ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். பயணியர் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அனைத்து உயர்நிலை நிலையங்களிலும் கட்டமைப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
எந்த நிலையத்திலாவது சீரமைப்பு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதுகுறித்துய் விரிவான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், பயணியருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தபிறகே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோகுல்புரி நிலையத்தில் உயிரிழந்த 53 வயது நபர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தோருக்கு 5 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோகுல்புரி சம்பவத்தையடுத்து, இரண்டு அதிகாரிகள், ஒரு மேலாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோரை, மெட்ரோ நிறுவனம் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement