பெற்ற பிள்ளைகளால் அதிர்ஷ்டம்…!! பல கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்

ஐக்கிய அரபு அமீரகம்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் அயின் பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வருபவர் ராஜீவ் அரிக்கத் (வயது 40). கேரளாவை சேர்ந்த புலம்பெயர்ந்த இந்தியரான இவருக்கு, மனைவி மற்றும் 5, 8 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கட்டிடக்கலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக, லாட்டரி டிக்கெட் குலுக்கலில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த முறை பிக் டிக்கெட் அபுதாபி என்ற பெயரிலான வாராந்திர லாட்டரி சீட்டை வாங்கி இருக்கிறார். லாட்டரி சீட்டில், அவர் குழந்தைகளின் பிறந்த நாட்களின் எண்களாக பார்த்து அதனை வாங்கியிருக்கிறார். அது அவருக்கு அதிர்ஷ்டம் தேடி தந்துள்ளது. அவருக்கு, 15 லட்சம் திர்ஹாம் (ரூ.33 கோடி) பரிசு தொகை கிடைத்துள்ளது.

இதுபற்றி அவர் கூறும்போது, 3 ஆண்டுகளில் முதன்முறையாக லாட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த முறை நானும், என்னுடைய மனைவியும் சேர்ந்து 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டை பார்த்து தேர்வு செய்தோம். அது எங்களுடைய குழந்தைகளின் பிறந்த நாட்கள் ஆகும். 2 மாதங்களுக்கு முன் 10 லட்சம் திர்ஹாம் பரிசு தொகையை, இதே எண்களை தேர்வு செய்தபோது, நூலிழையில் தவற விட்டேன். இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது என கூறுகிறார்.

நான் 2 டிக்கெட்டுகளை வாங்கினேன். அதற்கு பரிசாக இலவச அடிப்படையில், 4 டிக்கெட்டுகள் எனக்கு கிடைத்தன. அந்த டிக்கெட்டுகளே எனது வெற்றிக்கு உதவின என்றும் கூறுகிறார். பரிசை வெல்வேன் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு இருந்தது. வெற்றியாளர்களின் பெயரை கூறியபோது, அதில் என் பெயரும் உள்ளது என அறிந்தேன்.

ஆனால், அது முதல் பரிசு என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவர் தனிப்பட்ட முறையில் பரிசு தொகையை வென்றபோதும், அதனை 19 பேருக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.