ஈரோடு: “பெண்களின் வாக்குகள் தற்போது பாஜகவுக்கு அதிகளவு உள்ளது” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர் மக்களவை தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு டி.என்.பாளையத்தில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ரதி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா மத்திய அரசு வழங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே காங்கிரஸ் ஆட்சி காலமாக இருந்தால் அவர்கள் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.
2024-ல் மீண்டும் மோடி பிரதமர் ஆவார். பெண்களின் வாக்குகள் தற்போது பாஜகவுக்கு அதிகளவு உள்ளது. வெளிநாடுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலங்களும் செய்யக்கூடியது. ஆனால், இங்கு உள்ள முதல்வர் தமிழகத்தில் உள்ள பணக்காரர்களை இங்கிருந்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமே முதலீடுகளை பெறுகிறார்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில் கடந்த 6 மாதமாக ஊதியம் வராததற்கு, தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சிதான் காரணம். வேலை செய்பவர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் வங்கி ஆதார் எண்களை சரியாக வழங்காமல் தமிழக அரசு வேலை சரிவர வேலை செய்யவில்லை.
தமிழகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறி மாநில அரசு நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற கொங்கு மாவட்டங்களில் பெறப்படும் வரி மற்ற மாவட்டங்களுக்கு வழங்குவது ஏன்? அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் நிதியை தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்காதாது ஏன்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு முதற்கட்ட நிவாரண தொகையை மத்திய அரசு கொடுத்து விட்டது. தமிழக அரசு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்களை மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. அது மத்திய குழு ஆய்வு பரிசீலனையில் உள்ளதால் பரிசீலனை முடிந்து விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும்” என்றார் வானதி சீனிவாசன்.
அப்போது, “கோவையில் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் வெற்றி பெறுவாரா?” என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “முதலில் அவர் களத்துக்கு வரட்டும். பிறகு பார்ப்போம்” என்றார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் முன்னிலையில் மாற்று கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். முன்னதாக, பாஜக மகளிர் அணி மாநில துணைத் தலைவர் வித்யா ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி தலைவர் உமாரதிராஜன், மாநில மகளிர் அணி செயலாளர்கள் மோகனப்பிரியா, சுதாமணி சதாசிவம், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.