புதுடில்லி, சீ னாவுடனான மோதல் தொடரும் நிலையில், எல்லைக்கு வெகு அருகே உள்ள விமானப் படை தளத்தை, பயணியர் விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ள து.
தன் அண்டை நாடுகளுக்குள் நுழைந்து, அதற்கு உரிமை கொண்டாடும் பாணியை சீனா மேற்கொண்டுள்ளது. அதுபோல, கிழக்கு லடாக் உள்ளே நுழைய, சீன ராணுவம், 2020 மே மாதத்தில் முயன்றது.
இதற்கு நம் படைகள் சரியான பதிலடியைக் கொடுத்தன. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
இரு நாட்டு படை
பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. அதே நேரத்தில், மேலும் சில இடங்களில் இரு நாட்டு படைகளும் முகாமிட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, எல்லையில், நாட்டின் பாதுகாப்புக்காக பல உட்கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, லடாக்கின் நுாப்ரா பகுதியில் தோய்ஸ் கிராமத்தில் உள்ள, விமானப் படையின் விமான தளத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தளத்தை, ராணுவம் மற்றும் விமானப் படை பயன்படுத்தி வருகின்றன.
சிறு நகரங்கள் இடையே விமான சேவையை வழங்கும் உடான் திட்டத்தின் கீழ், சில விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
நவீன வசதி
தற்போது, இந்த விமானப் படை தளத்தின் ஒரு பகுதியை, பயணியர் விமான நிலையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, லடாக்கில் இரண்டாவது பயணியர் விமான நிலையம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நாட்டின் கடைகோடி பகுதிக்குக் கூட விமானச் சேவை வழங்குவதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்கிறது.
மேலும், அண்டை நாடான சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
தோய்ஸ் பகுதியில் ஒருங்கிணைந்த பயணியர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனத்துக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
புதிய விமான முனையத்துக்காக, 3.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. அங்கு, 5,300 சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த பயணியர் முனையம் அமையும். அனைத்து நவீன வசதிகளுடன், பாதுகாப்பு வசதிகளுடன் இது அமைய உள்ளது.
எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைய உள்ள இந்த முனையத்துக்கான திட்ட மதிப்பீடு, 130 கோடி ரூபாயாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்