நமது இந்திய வம்சாவளியால் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்

ஐக்கிய அரபு அமீரகம்,

பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் இன்று புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது, அதன் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹியானை சந்தித்து பேச இருக்கிறார்.

அவர் அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்திய சமூகத்தினர் 35 லட்சம் பேர் தனிநபர்களாக பணி செய்து வருகின்றனர்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஆஹ்லான் மோடி நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கிறார். ஆஹ்லான் மோடி என்றால், அரபியில், மோடியை வரவேற்கிறோம் என்று பொருள் ஆகும். இந்த நிகழ்ச்சியில், 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், நம்முடைய வம்சாவளியினர் மற்றும் உலகத்துடனான இந்தியாவின் நட்புறவை ஆழப்படுத்துவதற்கான அவர்களுடைய முயற்சிகள் ஆகியவற்றுக்காக நாம் அதிக பெருமையடைகிறோம் என தெரிவித்து உள்ளார்.

இந்திய வம்சாவளியினரில் ஒருவராக இன்று மாலை நானும் இருப்பேன் என்று எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த நினைவில் கொள்ளத்தக்க தருணத்தில் கலந்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் 7-வது பயணம் இதுவாகும் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.