நெல்லை: `34 மாதங்களில் 1,448 சிறுமிகளுக்குப் பிரசவம்' – ஆர்.டி.ஐ-யில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில், 34 மாதங்களில் 1,448 சிறுமிகளுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார ஆர்வலர் வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி 2021 முதல் அக்டோபர் 2023 வரை 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு நடைபெற்ற பிரசவங்கள் குறித்த கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த திருநெல்வேலி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், ஜனவரி 2021 முதல் அக்டோபர் 2023 வரையிலான 34 மாதங்களுக்குள் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு 1,448 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.

பிரசவம்

இதில், 1,101 பிரசவங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், எஞ்சிய 347 பிரசவங்கள் நகர்ப்புற மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றிருக்கின்றன. மேலும், இதில் அதிகபட்சமாக 88 பிரசவங்கள் மேலப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அதற்கடுத்தபடியாக 44 பிரசவங்கள் மானூரிலும் நடைபெற்றிருக்கிறது.

இதுகுறித்து பேசிய சுகாதார ஆர்வலர் வெரோனிகா மேரி தனியார் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் , “குழந்தைத் திருமண எதிர்ப்பு, பள்ளிப் பாடங்களில் பாலினக் கல்வி மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். குழந்தை திருமணத்தைத் தடுக்க பள்ளிகளில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வி பயில வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சில மாணவிகள், காதலின் பெயரில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

சிறுமி

இதனால், அந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, சிறுமிகள் கர்ப்பிணியாவது அதிகரிக்கிறது. அதேசமயம், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த நடமாடும் வாகனப் பிரிவை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், இன்னும் அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை” எனத் தெரிவிக்கிறார்.

மேலும், இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலர்கள், “அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வுப் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. காதல் திருமணங்களும் சிறுமிகள் கர்ப்பமாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. சிறுமிகள் கர்ப்பமான பின்புதான் இது எங்களின் கவனத்துக்கு வருகிறது. இதனைத் தடுக்கவே, மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு பள்ளிகளில் பாதியில் நின்ற மாணவிகளின் பட்டியலைத் தயாரித்து, அந்த மாணவிகளை நேரில் சந்தித்து, மீண்டும் அவர்களின் கல்வி தொடர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதனால் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றனர்” என்கிறார்கள்

சிறுமி

இன்னொருபக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுமிகள் கருத்தரித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க போலீஸார் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் POCSO சட்டங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.