`மதராசப்பட்டினம்’ படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ’, `2.0′, `தெறி’, `கெத்து’, `தங்க மகன்’ எனப் பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் ‘மிஷன் – சாப்டர் 1’என்ற படத்தில் அருண் விஜய்யுடன் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்து பின்னர், அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்கள் அன்பின் அடையாளமாய் எமிக்கு 2019யில் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் எமி மற்றும் ஜார்ஜ் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர்.

இப்போது எமி, பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருவருகிறார். இதுதொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாக, இது குறித்துப் பேசிய எமி ஜாக்சன், “நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் இருக்கிறோம். எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்துவிட்டார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளோம்” என்று மனம் திறந்து பேசியிருந்தார். பின்னர், கடந்த ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் இருவரும் தங்கள் காதலின் அடையாளமாக மோதிரங்களை அணிந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் தனது காதல் குறித்தும் தன் மகன் ஆண்ட்ரியாஸ் குறித்தும் பேசியிருக்கிறார் எமி ஜாக்சன். இது குறித்துப் பேசியுள்ள அவர், “என் மகன் ஆண்ட்ரியாஸ்க்கு எட் வெஸ்ட்விக்கை சிறுவயதிலிருந்தே தெரியும். அவனக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர்.
எட் வெஸ்ட்விக் என் வாழ்விலும், என் மகன் வாழ்விலும் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார். அதைப் பார்த்தப் பின்புதான் எட் வெஸ்ட்விக் எனக்கு நல்ல பார்ட்னராக இருப்பார் என்று அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். ஒரு நாள் என் மகன் ஆண்ட்ரியாஸே என்னிடம் வந்து, ‘மம்மி, நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லையா, நீங்கள் ஏன் எட் வெஸ்ட்விக்கை இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்’ என்று கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

உடனே அவன், ‘ஏன் என் அம்மாவை நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என எட் வெஸ்ட்விக்கிடமே சென்று நான் கேட்கப்போகிறேன்’ என்றான். எங்கள் காதலுக்கு என் மகன் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு நானும், எட் வெஸ்ட்விக்கும் எங்கள் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்துக் கொண்டோம்” என்று தனது காதல் குறித்துப் பேசினார்.