வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீபை மீண்டும் பதவியேற்க உள்ளார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் பாக்., மக்கள் கட்சி ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த உடனே பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும் பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் 75; பாகிஸ்தான் மக்கள் கட்சி 54; முட்டாஹிதா குவாமி இயக்கம் – பாக்., 17 இடங்களைக் கைப்பற்றின.
ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாக்.,கில் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் – முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் பாக்., மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்துள்ளன. இந்தத் தகவலை இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று உறுதிப்படுத்தினர்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷெரீப் தனது சகோதரரும் பாக்., முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான எம்.பி.,க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement