Doctor Vikatan: என் தோழி ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த இரண்டு மாதங்களில் இரண்டுமுறை அவளுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சலுக்கான மாத்திரை எடுக்கச் சொன்னபோது குழந்தைக்கு பாதிப்பு வரும் என மறுத்துவிட்டாள். கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுப்பது சரியானதா… எப்போது எடுக்க வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்

கர்ப்பகாலத்தில் காய்ச்சல் வரும்போது முக்கியமாக ஐந்து விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். முதல் விஷயம்…. வீட்டிலேயே தெர்மாமீட்ர் வாங்கி வைத்துக் கொண்டு உங்கள் காய்ச்சலின் அளவை பதிவு செய்யுங்கள்.
எந்த நேரத்தில் எத்தனை டிகிரி காய்ச்சல் அடிக்கிறது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் தன்மை எப்படியிருக்கிறது என்பதை மருத்துவர் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

உங்களுடைய காய்ச்சலானது 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டினால் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தயங்க வேண்டாம். பிளெயின் பாராசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். பாராசிட்டமாலுடன் வேறு மருந்துகள் கலந்த கலவை மாத்திரைகளைத் தவிர்த்துவிடவும்.
காய்ச்சலின்போது உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். குழந்தையின் அசைவுகளை கவனிக்கத் தவறாதீர்கள். வழக்கமாக நீங்கள் உணரும் குழந்தையின் அசைவுகளில் ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால், உடனடியாக உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகத் தவறாதீர்கள்.

24 மணி நேரத்துக்கும் மேலாக உங்களுக்கு காய்ச்சல் தொடர்ந்தாலோ அல்லது அது அதிகரித்தாலோ உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள். காய்ச்சலுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதைப் பார்த்து மருத்துவர் உங்களுக்குச் சரியான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.