Electoral Bond Scheme Illegal: Supreme Court Verdict Overturned | தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது: ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம்.

15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று (பிப்.,15) ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர்.

தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 (1)(ஏ) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. இந்த பத்திரங்களில் தகவல்கள் வெளிப்படையாக இல்லை. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை மக்கள் அறிவது அவசியம், அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

சட்டவிரோதம்

கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுப்பதிப்பதாக கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்கள் மட்டும் ஒரே தீர்வு அல்ல, வேறு வழிகளும் உள்ளன. தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது. தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இவ்வாறு தீர்ப்பளித்து அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், ‘வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திர முறை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி வழங்க வேண்டும். நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை மார்ச் 31ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.