தெற்கு காசாவின் பிரதான ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம்

ரபா,

காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. அந்தவகையில் தெற்கு காசாவின் பிரதான ஆஸ்பத்திரியான கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர்.அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும், நோயாளிகளும் வெளியேற தனிப்பாதை ஒன்றை இஸ்ரேல் படைகள் திறந்திருந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த ஆஸ்பத்திரி பகுதி நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று ராக்கெட் வீசப்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படை அங்கு குண்டுமழை பொழிந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.