மத்திய அமைச்சர் அமித் ஷா போல் போனில் பேசி பண மோசடி – ஒருவர் கைது @ உ.பி

லக்னோ: உ.பி.யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குரலில் பேசி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தின் பர்கேரா சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிஷன்லால் ராஜ்புட். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அலுலகத்திலிருந்து பேசுவதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான் மத்திய அமைச்சர் அமித் ஷா என்றும், தனக்கு பணம் கொடுத்தால் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஜனவரி 20ஆம் தேதி வரை அந்த நபர் கிஷன்லாலின் செல்போனுக்கு 9 முறை அழைத்துப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கிஷன்லால் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார். கிஷன்லாலுக்கு வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், ட்ரூ காலர் செயலியில் மத்திய உள்துறை அமைச்சக அலுவகத்தின் முகவரியை கொடுத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியின் பின்னால் ரவீந்திர மவுரியா மற்றும் ஷாஹித் என்ற இரண்டு நபர்கள் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதில் ரவீந்திர மவுரியாவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஆனால் ஷாஹித் தப்பி ஓடிவிட்டார். அவர்கள் இருவர் மீதும் கொள்ளை, ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மவுரியா மற்றும் ஷாஹித் இருவரும் இதற்கு முன்பு இதுபோன்ற மோசடிகளில் பலமுறை ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா போல பேசி அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பணமோசடியில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.