“எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஆளுநரின் பொறுப்பு” – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அரசு எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். இந்த நிகழ்ச்சியையும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் ஆரம்பித்துள்ளோம். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கழக நிகழ்ச்சிகளும் இனி தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கப்படும். எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.

குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு இதே ஆளுநர் என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார். அதன் பிறகு தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இரண்டே நாளில் பல்டி அடித்து மன்னிப்புக் கோரினார்.

தேர்தலை சந்திக்க இன்னும் நமக்கு ஏறக்குறைய 60 நாட்கள்தான் உள்ளன. இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள். எனவே நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு வெற்றியை தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (பிப்.12) அன்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு முன்னரே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.