முக்கிய தடயமான தலைமுடி.. 30 ஆண்டுகளாக நீடித்த கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை

லண்டன்:

லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 1994-ம் ஆண்டு 39 வயது நிரம்பிய பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 140 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. இங்கிலாந்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக துப்பு துலங்காமல் இருந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட முடியின் மூலம் உண்மையான கொலையாளி அடையாளம் காணப்பட்டு அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

வழக்கு விவரம்:

கொலம்பியாவைச் சேர்ந்த மரினா கோப்பல் என்ற பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு மசாஜ் தொழில் செய்து வந்தார். அவ்வப்போது பாலியல் தொழிலிலும் ஈடுபட்டார். இவரது கணவர் நார்த்தாம்டன் பகுதியில் வசித்து வந்தார். கணவரை பார்ப்பதற்காக வார இறுதி நாட்களில் நார்த்தாம்டன் செல்வது வழக்கம்.

1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மரினாவின் கணவர் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர் நலமாக இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக அவரது பிளாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது மெரினா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையில், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த இந்திய வம்சாவளி வாலிபர் சந்தீப் பட்டேலின் (வயது 21) கைரேகை பதிவாகியிருந்தது. ஆனால், அவரது கைரேகைகள் முக்கிய சான்றாக கருதப்படவில்லை. அத்துடன் கொலையாளியை அடையாளம் காண்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. எனவே, பல ஆண்டுகளாக வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில், 2008ல் தடயங்களை மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது மெரினாவின் மோதிரத்தில் ஒரு முடி சிக்கியிருந்ததை கவனித்தனர். அந்த முடி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 2022ல் அந்த முடியின் டி.என்.ஏ. பரிசோதனை விவரத்தை, ஏற்கனவே சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்பட்ட சந்தீப் பட்டேலின் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டும் ஒத்துப்போனது. அதன்பின்னர் பிளாஸ்டிக் பையில் பதிவான கைரேகைகள், கொலை நடந்த இடத்தில் திருட்டு போன மரினாவின் வங்கி அட்டை மூலம் கொலை நடந்த சிறிது நேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை வைத்து சந்தீப் பட்டேல் மீதான சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி சந்தீப் பட்டேலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஓல்டு பெய்லி கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சந்தீப் பட்டேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து சந்தீப் பட்டேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோப்பல் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்த தலைமுடியை வைத்து தடயவியல் குழு மேற்கொண்ட புதுமையான ஆய்வு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பட்டேலை நீதியின் முன் நிறுத்தியதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் விசாரணைக் குழுவினர் ஆகியோர் மெரினாவின் கொலை வழக்கில் துப்பு துலக்கியதில் குழுவாக இணைந்து முயற்சி செய்ததாகவும், அதற்கு வெற்றி கிடைத்ததாகவும் தடயவியல் துறை மேலாளர் தெரிவித்தார்.

மேலும், வளர்ந்து வரும் தடயவியல் நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தீர்வு காணப்படாமல் உள்ள வழக்குகளை காவல்துறை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் என்றும், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரவும், அப்பாவிகளை விடுவிக்கவும் இந்த தொழில்நுட்பங்கள் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.