விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரு.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து கனத்த இதயத்துடன் அறிந்தேன். இந்த கடினமான நேரத்தில், அவர்களுடன் துணை நிற்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பட்டாசு விபத்து: சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.