புதுடெல்லி: அசாமில் ஓர் இனிப்பகத்துக்குள் இரவில் புகுந்த யானை ஒன்று திருமண விருந்துக்காக தயாரிக்கப்பட்ட இனிப்புகளை மொத்தமாக காலி செய்த நிகழ்வு நடந்துள்ளது. யானை ருசித்து காலி செய்த இனிப்பின் மதிப்பு ரூ.50,000 எனத் தெரிகிறது.
அசாமின் அலிபூர்துவாராவின் மதாரிஹட் பகுதியில் இனிப்புக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ் பானிக். அப்பகுதியின் பிரபல இனிப்பகமான இங்கு திருமணம் உள்ளிட்ட விருந்துகளுக்கு இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இன்று காலை தனது கடையை திறந்த ராஜேஷுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் கடையின் பக்கவாட்டுச் சுவர் இடிக்கப்பட்டு பெரிய ஓட்டை விழுந்திருந்தது.
கடையின் உள்ளே இருந்த ரூ.50,000 மதிப்புள்ள பல்வேறு இனிப்பு வகைகள் சுத்தமாக காலியாகி இருந்தன. இவை யாரால் திருடப்பட்டிருக்கும் என அறிய தனது சிசிடிவி கேமிராவை சோதித்துப் பார்த்த ராஜேஷுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த காரியத்தை அருகிலுள்ள காட்டிலிருந்து தந்தம் இல்லாத ஒரு ஆண் யானை செய்திருப்பது தெரிந்துள்ளது. இக்கடை உள்ள பகுதியின் அருகில் யானைகளுக்கான ஜல்தாபரா தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் யானைகள் அவ்வப்போது ஊரில் நுழைந்து உணவு தேடுவது வழக்கம். இந்தமுறை, யானைக்கு ராஜேஷின் இனிப்பகம் சிக்கிவிட்டது.
உள்ளூரில் நடைபெறும் ஒரு திருமணத்துக்காக ராஜேஷ், நேற்று முழுவதிலும் தம் பணியாளர்களுடன் அனைத்து இனிப்பு வகைகளையும் செய்திருந்தார். இதுபோல், அருகிலுள்ள பள்ளிக்கூடத்திலும் மதிய உணவுக்காக வைத்திருந்த அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளும் அவ்வப்போது யானைகளால் காணாமல் போவது உண்டு.
இதன் மீது ஜல்தபரா தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் இனிப்பு கடைக்காரர் ராஜேஷ் புகார் செய்துள்ளார். அதேசமயம், வேறுவழியின்றி மாலைக்குள் திருமண விருந்துக்காக புதிய இனிப்புகளை அவசரமாகத் தயாரித்து வருகிறார்.